Showing posts with label எண்ணங்கள். Show all posts
Showing posts with label எண்ணங்கள். Show all posts

Thursday, May 04, 2017

திருகாணி

ஏங்க....ஏங்க...

துண்டு விரித்து படுத்திருந்தவன் கருவிழிகள் இரண்டும்  மேல் நோக்கி விழித்து அவளின் முகம் பார்த்தது.

அவன் பார்வையின் அா்த்தம் கண்டு...

நான் தேடிக்கிட்டு இருக்கேன் நீங்க துாங்கிட்டு இருக்கீங்க..

என்ன ?

திரு..காணி...

எந்த திருகாணி...

தோட்டு  திருகாணி எங்கேயோ விழுந்திடுச்சி..அதான்...

கைலி சரி செய்து எழுந்து ...என்னடி  சொல்ற..

எங்க படுத்த...எங்க உட்காந்த...

நீங்க போன பிறகு கட்டில படுத்தேன்..மாடி வாசல் கூட்டுனேன்.

ஏற்கனவே  கட்டில் தேடல் மாடி படி தேடல் முடிவடைந்திருந்தது.

உங்க கண்ணுக்கு  மாட்டிடுங்க...

பொறுமையாய்  நடந்து தேடினான் உட்கார்ந்து பார்த்தான் டார்ச் லைட் அடித்து இடுக்குகளில் தேடினான்.

துாசி தெரிந்தது திருகாணி தெரியவில்லை.

தொலைந்த திருகாணியின் இடம் மட்டும்  தொியாமல் கண்களின் தேடல்கள் தொடர்ந்தன.

உச்...

காணாமல் கவலைபட்டாள்.

சாி உடு...படுக்கையிலிருந்து எழும்போது சரி பண்ணிப்பியே...

சரிபண்ணல ...அதான்  தண்டனை..

பரவாயில்ல..இனி கவனமா இருந்துக்க...

மணி பார்த்தான்..வேலைக்கு செல்லும் நேரம் தாண்டி மணி காட்டியது.

ஆகா..நான் கிளம்புறேன்.

கிளம்பினான்.

கவலையுடன் தேடல் தொடர்ந்தாள்.

ஆனால் திருகாணி...??!!

Tuesday, February 09, 2016

புதிய பயணமும் சிறிய பதைபதைப்பும்.

வேற்றுமொழி வழக்கம் உள்ள புதுஇடத்திற்கான முதல்பயணம் சிறிது பதைபதைப்பு உருவாக்கியது.

பயணம் பல வினாக்களை மனதில் உருவாக்கிப்படியே இருக்க இப்பொழுது இருக்கும் சமுதாய சூழலில் பெண்களுடனான பயணம் மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

எப்படி ச்செல்வது?

பெரிய நகரம் சென்று அங்கிருந்து சின்ன ஊர்களுக்கு எப்படி செல்வது?

எங்குத் தங்குவது ?

நமக்கு த்தெரிந்த நபர்கள் யாரும் இருக்கின்றார்களா?

சாப்பாடு எப்படி இருக்கும்?

அங்குள்ள மனிதர்கள் அவர்களின் மொழி பழக்கவழக்கங்கள் பற்றிய மனதில் ஏற்படும் வினாக்கள் அதைப்பற்றிய விவர தேடுகையில் கிடைத்த விபரங்கள் அதைப்பற்றிய குழப்பங்கள் எல்லாம் சேர்த்து  பயணத்தைச் சுவாரசியம் ஆக்கியது.

பொதுவாக புது இடங்களுக்கு ச்செல்கையில் கடைப்பிடிக்கும் வழக்கங்கள் தெரியாதது கூடப் பதைபதைப்புக்கு காரணமாக இருக்கலாம்.

என்ன என்ன தேவை?  என்று சென்றவர்களிடம் விசாரித்து அவர்கள் கொடுத்த தகவலின்படி உடை மற்றும்  தேவைப்படும் பொருட்கள் சேகரித்து பயணத்திற்கு த்தயார்செய்தல் புதிய அனுபவம்.

விவர சேகரிக்கையில் அவர் அவர்களின் பார்வைக்கு தகுந்தமாதிரி அந்த இடங்களைப் பற்றிய பேச்சுகளை  , கிடைத்த இணைய த்தகவல்களுடன்  ஒப்பீடு செய்து ஒரு முன்முடிவுக்கு வருகையில் பயணநாள் வந்துவிட்டது.

பயணமும் ஆரம்பமாகியது புதியஅனுபங்களை நோக்கி...


Saturday, January 09, 2016

சொந்தபுலம்பல்





நடக்கும் நிகழ்வுகள் நம்மைச்சுற்றி வட்டமிட்டபடியே  யோசனைகள் பலவாய் மனதில் ஓடிக்கொண்டே சிலபல கணக்குகளினால் ஒவ்வொரு செயலாய் முடிய ப்பிரச்சனையே வாழ்க்கையாகி ப்போனது.

தான் தன்தேவைக்கான மனஓட்டத்தில் பிறரை தனக்காக வளைக்க நினைப்பது பிறரின் நலம் பற்றிய  கவலை கொள்ளாது தன்நலம் பேணுதல் தான் மனித வாழ்வாகிப்போனது.

தன்  தேவைப்போக வாழவைக்கும்  தகுதி இருந்தும் பிறரை வாழவைக்கா வசதி பெருக்கம் எதற்காக..??!! வழி வழியாய் மனித  பரிமாணத்துக்குள்  நுழைந்துவிட்ட ஒன்றா அல்லது குறுகிய காலத்துக்குள்  மனித மனத்துக்குள் ஏற்பட்ட மாற்றமா .??!!

Friday, December 25, 2015

பொன்வண்டு





இரண்டுநாட்கள் முன்பு நடந்துசெல்லும் கோவில்பாதையில் எந்த அசைவும் இல்லாதுமல்லாந்துபடியே கிடந்தது அந்தவண்டு.

பெரியவண்டுகள் மல்லாந்துவிட்டால் திரும்பவும் தன்உடல் திருப்பி நேராய் வருவது மிககடினம். நிறையவண்டுகளின் உயிர்போய்விடும்.

திருப்பினேன் ...வியந்துபோனேன்.

பார்த்து பலவருடங்கள் ஆகியதால் வியப்புமேலிட சிலநிமிடங்கள் பால்யகால நினைவுகளில் உள்ளிழுக்கப்பட்டேன்.

வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றும் இருக்க..இருக்கும் கொல்லைகளில் இலந்தைமரம் கட்டாயம் இருக்கும்.

இலந்தைபழ சேகரிப்பில் நண்பர்களுடன் அடித்த கொட்டம் ஞாபகத்துக்கு வந்தது.

விழும் பழங்களை தவிர க்கல் அடித்து ப்பொறுக்கும் பழங்கள் அதிகம்.

கல் எடுத்து க்கிளை தேடுகையில் இலைதின்று அமர்ந்திருக்கும் இந்தபெரியவண்டு. கிளை நோக்கி க்கல் பாயும்  பறக்க சந்தர்ப்பம் கிடைக்காது கீழேவிழும்.

நீ முந்தி நான் முந்தியாய் சிறகுகள் விரியாது எங்களில் ஒருவன் விரல்களுக்கிடையே சிறைப்பட்டு போய்விடும்.

இலந்தை பழம் பின்னுக்கு த்தள்ளப்பட்டு வண்டு  விளையாட்டு பொருளாகிவிடும்.

நிமிடங்கள் கரைந்தும்

அசைத்து க்கொண்டிருந்தேன் அசைவு தெரியவில்லை.

இறந்து போயிருந்தாலும் என்னுள் பறந்தது...திரும்பவும் பறந்து மரக்கிளைகளில் அமர்ந்தது.

உயிரோடு இந்த வண்டை நான் படம் பிடிக்க அலையவேண்டும் அதுவரை என் ஆவணக்காப்பகத்தின் பிரதிநிதியாய் இருக்கட்டுமே என்று ஸ்மார்ட்போனில் படம் பிடித்தேன்.




Monday, December 21, 2015

தமிழருவிமணியனும் தேவைகளும்.




அதிக சம்பாதித்த உறவினர்களின் விசேடங்களுக்கு அவர்களதுஏழை உறவினன் செல்லும் போது அவர்களுக்கு  கிடைக்கும் மரியாதை என்பது கோவில் அர்ச்சகர் பிரசாதத்தை நம்கையில் அவர் கைப்பட்டு விடாமல் கொடுப்பது போன்றது.

அங்கு அவர்களுக்கு கிடைக்குமரியாதை அவமரியாதை.

ஊருக்காக உறவினன்  பெயர்போட்ட அழைப்பிதழ் ஆகா..மதித்து க்கொடுத்துவிட்டார்களே என்று இவன் விசேடங்களுக்கு ச்செல்ல  உறவினனின் பராமுகம் புன்னகைமறந்த உதடுகள்.

உள்வெறி கிளம்பும் நாமும் சம்பாதிக்க வேண்டும் மற்றவர்கள் செய்ததை நாமும் செய்துகாட்ட வேண்டும் என்கிற துடிப்பு.

வாய்ப்பு கிடைத்தவர்கள் வெற்றியாளராக கிடைக்கப்பெறாதவர்கள் இன்னமும் உறவினர்களின் பராமுக அவமதித்தலுக்கு உள்ளாகவேண்டும்.

கிட்டதட்ட நாகரீக உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து நம்தேவைகளை மற்றவர்கள் கவனிக்கும்விதமாக ஊர் மெச்சும் வாழ்வு வாழ க்காசு தேவை.

ஆசைப்பட்டு த்தான்  ஓடவேண்டும் தேவைகளை  குறைத்தால் கஞ்சன் , கருமி  பட்டங்கள் ஒட்டிக்கொள்வதில் ஆச்சரியமில்லை.

தமிழருவிமணியன் பேச்சை கேட்கநேர்ந்ததுபேச்சின்முடிவில்

நாகரீக உலகில்  தேவைகளை அதிகரித்து க்கொண்டே செல்வது நாகரீகமல்ல தேவைகளை குறைத்து க்கொள்வதுதான் நாகரீகம் என்று சொன்னார்.

இச்சமுதாய ஓட்டத்தில் மணியன் கருத்தோடு முரண்படத்தான் முடிந்தது.


ஒத்துபோதல் என்பது...!!???

Friday, December 04, 2015

மீள முடியும் மீண்டுவாருங்கள் மக்களே..


சென்னை வெள்ளம் பெரும் பாதிப்பிற்கு  ச்சொல்லப்படும் ஒரே காரணம் ஆக்கிரமிப்பு . இந்த வெள்ளம் ஆக்கிரமிப்பு பகுதிகளை அடித்து ச்சென்றிருக்கும்
இனிமேலாவது  ஆக்கிரமிப்பு இல்லா வடிக்கால் வசதிகளை சரிப்படுத்தி வைக்குமா இந்த அரசாங்கமும் வருகிற அரசாங்கங்களும்?

தொலைக்காட்சி வாயிலாக ச்சென்னை மக்கள் செல்லும் பொியகுறை மின்சாரம் இல்லாதது. இந்தளவு வெள்ள பாதிப்பில் ஊர் இருக்க  மின்சாரம் துண்டிக்கப்படாமல் என்ன செய்வது என்று தெரியவில்லை. கஷ்டப்பட்டு த்தான் ஆகவேண்டும். அரசாங்கத்தை குறைசொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை.

வெள்ளப்பாதிப்பில் இருந்து மீள்பவர்களும் உண்டு கஷ்டப்படுவார்களும் ஒன்று அவரவர்களின் பொருளாதார சூழலை பொறுத்தது தான்  .

எதுவாயினும் இருக்கின்ற சூழலை அப்படியே ஏற்றுக்கொண்டு மீண்டுவர முயற்சிக்க வேண்டும். இதுதான் எங்கள் ஊர் வெள்ளம் எங்களுக்கு சொல்லிக்கொடுத்தப்பாடம்.

சென்னை வெள்ளமாகட்டும் எந்த ஊர் வெள்ளமாகட்டும் அதனுடைய பாதையில் நமக்கு நிறையப்பாடங்களை தந்துவிட்டுதான் சென்றுள்ளது.

எத்தனை நாகரீக வளர்ச்சி என்பது மனிதனுக்கு மட்டுமே இயற்கைக்கு அல்ல என்பதை மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

பொருள் ஆதாரத்தை வைத்துமட்டுமே நாம் வாழ்ந்துவிடலாம் என்றுஇருந்தவ்ர்களுக்கு இன்னொரு கையும்  இருந்தால் தான் நம் வாழ்க்கை பாதுகாப்பாக இருக்கும் என்பதை வெள்ளத்தில் வெளியேற உதவிய கைகள் உணர்த்தியிருக்கும் குறிப்பாக சென்னைவாழ் மக்களுக்கு..

சுகாதார துறை முடுக்கிவிட்டு தொற்றுநோய் பரவாமல் தடுக்க அரசு பெருமுயற்சியும் அதற்கு மக்களின் ஒத்துழைப்பும் மிகுந்த அவசியம்.

மீள முடியும் மீண்டுவாருங்கள் மக்களே..






Thursday, December 03, 2015

பெய் மழையே பெய்




பெய் மழையே பெய்

பெய்து
உருவாக்கினாய்தடம்

மனிதர்களின் ஆசை
அழிந்ததடங்கள்

வீதிகள் ஆறாகின
குடியிருப்பு குளமாகியது

உன் தடத்தில்
அரசியல்
உன்தடம் தடுமாறிப்போனது

மக்கள்
மாக்கள் ஆகி
திரியத்தான்

அரசியலும்
அரசியல் கட்சிகளும்

பெய் மழையே பெய்
நீ இயற்கை

மனித நாகரீகத்தால்
நலிவடைந்த
உன் வழித்தடங்கள்

வீதி ஆறுகளும்
குடியிருப்பு குளங்களும்
இயற்கையே…

Saturday, November 28, 2015

நாட்குறிப்பு 28.11.2015

நாளைய விருத்தினர் வருகைக்காக திட்டமிடல் எங்கள் வீட்டில் காலையில் நடந்தது. 

விருந்தினர் வருகை முன்கூட்டியே திட்டமிடபட்டதால் திட்டமிடபட்ட அவர்களின் வருகையால் திடீரென்று எங்களுடைய நண்பரால் கோவிலுக்கு செல்ல அழைக்கப்பட்டவாய்ப்பு எங்களால் நிராகரிக்கப்பட்டது.

இன்றுசூடு தெரியவில்லை வெயில் அடித்தது.

இதுவும் மரச்சிற்பம் தான்

எங்களுடைய பக்கத்து ஊரில் ராமஜெயம் பைனான்ஸ்கம்பெனி தந்தையின் நாணயத்தில்  வளர்ந்தது தமையனின் நாணயத்தால் தலைகவிழ்ந்து.

50 ஆண்டுகால நிறுவனம் பூட்டப்பட்டது  நிறுவனர் ஓடினார். கொடுத்தவர்கள் மேலும் பூட்டைப் போட்டார்கள்.

இந்தவாரத்தின் சூடான பேச்சு இன்றும் சூடாக நண்பர்களால் பேசப்பட்டது.

இணையம் இன்றைக்கு முழுவதும் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தது.

இணையம் திடீரென கிடைக்க நாட்குறிப்பு பதிவானது.


Friday, October 30, 2015

எதிர்கால பயம்

பள்ளிவிழா  மரக்கன்றுகள் இலவசமாய்வழங்கினார்கள் மரக்கன்றுகளை மக்கள் ஆர்வமுடன் வாங்கவேண்டும் என்பதற்காகவே பள்ளிதலைமையாசிரியர் பாடுப்பட்டுசெம்மரக்கன்றுகள்சந்தனமரக்கன்றுகள் தருவித்திருந்தார்.

மரக்கன்றுகளை வாங்கியவர்களில் ஒருவனுக்கு ஏனோ  ஒரு எண்ணம் உதித்தது.



மரக்கன்றை நாம் நட்டு வளர்த்துவிடலாம். பதினைந்து வருடம்  கழித்து பல லட்சம் விலைபோகும் மரங்கள் இவை.
பயன் தரும் நேரத்தில் எவனாவது வெட்டி சென்றால் என்ன செய்வது?

இந்த கன்றை வைத்து கண்முழித்தா பாதுகாக்க முடியும் மனம் தன்போக்கில் ஒரு வாதம் வைக்க..

போடா…மடபய மவனே..போயி குழி தோண்டு செடிய வையி..அப்புறம் பாத்துகலாம் இன்னொரு வாதம்.

வாங்கியாச்சு வைச்சுதானே ஆகனும் என்று தனக்குள் சொல்லி..

கொல்லை இடம் தேடி குழிபறித்து நட்டான்.

செடி மண்ணில் வேர்ஊன்றி தன் வளர்ச்சிக்காக காத்துகிடக்க…

இரு நாட்கள் கழித்து இணையம் நோண்டுகையில் ஒரு செய்தி.

கோவையில்கொல்லையில் வளர்த்த சந்தனமரம் திருட்டு  என்று

செய்தியின் இணைப்புக்கான URL


அட பாவியலா..இவன் நினைச்சது சரியாப்போச்சே…

இனி பயப்புட்டு என்ன செய்யப்போறோம் .

மொதல்ல மரம் வளர்ப்போம்..அப்புறம் பாதுகாப்போம் சொல்லிட்டு ..

தன் வேலையை  பார்க்க ஆரம்பித்தான்.


Wednesday, October 28, 2015

முகம் மாறிய சாலை

NH 67

கருமேகங்கள் சூழ்ந்திருந்தன லேசாய் மழை துாரல் ஆரம்பிக்க  ..

போகலாமா? வேண்டாமா...மனதின் போராட்டம்.

ஆங்...அதான் வழி நெடுக மரமா இருக்குண்ணா..அப்படியே ஒண்டி ஒண்டிக்கிட்டே ஊர் போய் சேரலாம்.

கௌம்புங்க.. நண்பர் விரட்டினார்.

பசுமையான மரக்குகை முன்விரிய மழைதுாரல்கள் இடைய வண்டி பயணித்தது.
இந்தியா கடன்காரர்களின் உலகம் ஆகிவிட்டது. என்னையும் சேர்த்துதான்.

கடனில் ஓடும் இருசக்கரவாகனங்கள் நாற்சக்கர வாகனங்களின் பெருக்கம்
சாலை மூச்சு முட்டியது.

தங்கநாற்கர சாலை விரிவுபடுத்தும் திட்டத்தில்  NH67 சிக்கிக்கொள்ள கணக்கெடுத்தார்கள் .

எத்தனை தலைமுறைகளை பார்த்த மரங்கள் நிழல் பரப்பின பயன் தந்தன உருப்படாத சாலை விரிவாக்க திட்டத்தில் மண்ணில் வீழ்ந்தன.

ஒரே நாளில்  முழுமரமும் அடியோடு வெட்டப்பட்டு வழிநெடுகலும் வீழ்ந்து கிடக்க பதைத்த மனங்களில் என் மனமும் ஒன்று.

மரம் வெட்டாது திட்டங்கள் போடமாட்டார்களா..?

வெட்டப்பட்ட மரங்கள் ஏற்றியவுடன்   வெறிச்சோடி கிடந்த சாலையின் முகம் மாறியது.

பயணத்தின் இடையே இளைப்பாறி செல்ல நிழல் தந்த மரங்கள் காணாமல் போக வெயிலே நிழலாய் பயணங்கள் தொடரும்.


Saturday, October 24, 2015

சட்டை

தீபாவளி நெருங்கிவிட்டது.

வருடம் வருடம் தீபாவளி சமயத்தில் மட்டும் சட்டை பற்றிய குழப்பங்கள் நிறையவே வரும்.

குறைந்த விலையில் தரமான சட்டை எங்கு கிடைக்கும் ?

இதுதான் குறிக்கோள்.

ரோட்டில்  வண்ணசட்டைகளை டூ வீலர் வியாபாாி விற்றுசெல்ல மாத்துக்கு போட்டுகலாம்  என்று அவரிடம் பேரம் பேசி வாங்கிய சட்டையின் விலை ரூபாய் ஒரு நுாறு மட்டும்  இரண்டு வருடங்கள் மேலாகியும் இன்னமும் உழைப்பில் இருக்கிறது.

இதெல்லாம் போட்ட சமுதாயத்தில் மதிப்பு கிடையாதுப்பா...

பெரிய  கடையில போயி பெரிய பிராண்ட் சட்டை எடுத்தா மதிப்புன்னு சொன்னாங்க...

பெரிய பிராண்ட் சட்டை பற்றிய   உண்மைகளை இணையத்தில் தேடினால் அப்படி இப்படி செலவெல்லாம் சேத்தாலும்  ரூபாய் 500 க்கு மிகையாகது  ரூ 1700 கொடுத்து சட்டை வாங்கினீங்கன்னா ரூ 500 போக பாக்கி பணம்  எதுக்கு கொடுக்கிறீங்க நீங்க  புரிச்சிக்க வேண்டியதுதான் சொல்ல..

குழப்பம்...விசாரிக்கிறேன்..விசாரிக்கிறேன்.

ஆனாலும் வியாபார  தத்திரங்களின் கவர்ச்சி பிராண்ட் மனதை ஈர்க்கிறது.

பெரியகடைகளில் நிற்கும்  பல்லாயிர மனிதர்களில் ஒருவனாய்  கண்கூசும் விளக்கொளியில்  எனக்கான  சட்டைகளை  தேடுகிறேன்.

பிடித்த சட்டை வாங்கி கடையின் படிகளை விட்டு இறங்கி  தெருவை கடக்க
தெருவியாபாரி சட்டை விற்கிறார் ...

லைட் செலவு இல்லீங்கோ...

விளம்பர செலவு இல்லீங்கோ....

ஏ.சி. செலவு இல்லீங்கோ...

ஆட் செலவு இல்லீங்கோ...

அதனால சட்டையின் விலை  200 தாங்கோ...

பல்வேறு நிறங்களில் அளவுகளில் சட்டை அடுக்கி  வைக்கப்பட்டிருக்க...

நான் வாங்கிய சட்டை என்னை பார்த்து சிரித்தது.



Thursday, August 27, 2015

அலையடிக்கும்

மொபைல் போனின்
சத்தம்
காதுக்குள் ஒலித்தப்படியே...
ஓடும் வண்டி
ஓரமாய் நிற்க
கைகளால் துழாவி
விரல்களால் தடவி
திரையை உற்றுப்பார்க்கிறேன்
அழைக்கிறேன்
கேட்கப்படும் செய்தி
வண்டி நகர
மனம் செய்தியில்
இருவேறாய்
பிரிந்து போகிறேன்
அலையடிக்கும்
மனது
அனிச்சையாய்
உடலியக்கம்...

Saturday, May 09, 2015

அன்று சித்ரா பெளா்ணமி



வழக்கமாய் கடை மூடும் நேரம் வரவில்லை ஒரு மணிநேரம் முன்னதாய் கடை  மூட ..மனதில் எங்கு போகலாம்    என்று பல பாதைகள் மனதில் வந்து போனது.

அன்று சித்ரா பெளா்ணமி

வண்டி அருந்தவபுரம் அரசப்பட்டு சாலையில் ஊர்ந்தது. பௌர்ணமி நிலா காய்ந்தது சாலையின் இருமங்கிலும் வயல்வெளி பரந்து கிடக்க  பெளா்ணமி வெளிச்சம் தனிமை  தழுவும் தென்றல் விளக்கொளி இல்லா இருசக்கர வாகனத்தின் பயணம்  ஆனந்தம்.

வண்டி முன்னேறியது.

மனம் மகிழ்ந்தது இயற்கைக்கு நன்றி சொல்லியது .




Wednesday, March 18, 2015

வருத்தம்

இன்று காலை செய்திதாளில் படித்த  வன்புணர்ச்சி செய்திகள் மனதை மிகவும் வருத்தம் அடைய செய்தன.

சமுதாயத்தின் போக்கு மிகவும் மாறிவிட்ட சூழலில் நம்முடைய பாதுகாப்பை நாம் தான் உறுதிப்படுத்தி கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

மனிதம் குறைந்துவிட்டது....செத்துவிடவில்லை.

ஒருவிதமான எச்சரிக்கை உணர்வுடனே வாழவேண்டிய வாழ்க்கை சூழல் என்பது  இச்சமுதாயத்தின்  அசிங்கமான பகுதி.

நாம் நம்மை தற்காத்து கொள்ள பல வழிகளிலும் நம்மை மேம்படுத்தி ஒவ்வொரு செயலிலும் நம்முடைய பாதுகாப்பை  நிச்சயப்படுத்திகொண்டு செயல்படவேண்டும்.

காசுக்கான வாழ்க்கையில் நிறைய வாழ்க்கை சுகங்களை இழந்துவிட்ட நாம்  தரம் தாழ்ந்த சமுதாயகயவர்களாலும் நம் நிம்மதியை நிறையவே தொலைக்கிறோம்.

சமுதாயத்தில் நாமும் ஓர் அங்கம் நாம் சரியாய் நடைப்பயில பிறர் அதை பாதையாய் பின்பற்றுவார்கள் நாமும் முயற்சி செய்வோம்.

Tuesday, February 24, 2015

காலை பயணம்

காலை சூரியன்  கதிர்களை பரப்பியது. எட்டி பார்க்கையில் ஜொலித்த பசும் இழைகள். பறவைகள் பறந்து கொண்டிருந்தது.சைக்கிள் முன்னேறியது.காலை பயணம் பல்வேறு எண்ணங்களை விதைத்து  இயற்கை ரசிப்பில் சைக்கிள் என்.ஹெச்.67 தொட்டு திரும்பியது.

பயணம் தொடர்ந்தது அப்பொழுது தான் வாகனத்தில் அடிப்பட்ட இறந்த காட்டுபூனையின் குடல் வெளிவந்து கிடக்க காக்கைகள் கொத்தி இழுத்தன.
சைக்கிள் முன்னேறியது பல அடிகள் பயணித்த பிறகு நீர் பாம்பு ஒன்று நசுங்கி சக்கையாய் கிடந்த இடத்தை கடந்தது. உணவு தேடலுக்காய் சாலையை கடக்க அதன் பயணம் வாகன ஓட்டிகளால் பாதியில் முடிந்தது.

சைக்கிள் முன்னேறியது  ..ச்சே..என்ன வாழ்க்கை இது...

சில அடிகள் கடந்திருக்கும் சைக்கிள்
நீர் ஆமை இடம் மாறும் பயணத்தில்  தன் உயிரை  வாகனங்களின் சக்கரத்திற்கு இரையாக்கி ரத்தமும் சதையுமாய்  ஓட்டின் எல்லாபக்கமும் சிதறி உயிரை இழந்திருந்தது.

மெதுவாக முன்னேறிய சைக்கிள்  முன்னே லாரி வந்து கொண்டிருக்க பின் தொடர்ந்து ஒலி எழுப்பிய படி பேருந்து வர சைக்கிள் மெல்ல ஓரத்தில் நின்று பயணம் தொடர்ந்தது.

Thursday, January 29, 2015

பெரியம்மா(26.01.2015)

எங்களை தவிர
யாருக்கு
உங்க பொண் போகும்
எனக்காக
பெண் கேட்டு
சண்டையிட்டது
அந்த உரிமை
யம்மாடி
ராஜா வந்திருக்கான்
சாப்பாடு
எடுத்து வை
மருமகளை
கட்டளையிட்டது
அந்த உரிமை
அப்பா
அம்மா
உயிர் துறக்க
நாங்கள் இருக்கிறோம்
என்ற
அந்த உரிமை
நாற்காலி
வழுக்கிவிட
இடுப்பு எலும்பு
உடைந்து போக
சிகிச்சை பலனின்றி
இறந்து போன
எங்கள் பெரியம்மாவின்
உரிமையை
இனி எங்கே தேடுவேன்??

Friday, January 23, 2015

அறியாமையும் மரணமும்

காரணம் தெரியவில்லை நண்பர்  தற்கொலை செய்து கொண்டார். சில வருடங்களாய் தொடர்பில் இல்லை தான். அவரது மரணம் சிந்திக்க வைத்தது.

அவரது பெண் பேப்பர் படித்தது. அவரது ஆண்பிள்ளை பிள்ளைகளுடன் சிரித்து விளையாடி கொண்டிருந்தான். மரணம் பற்றி தெரியாத பிள்ளைகள்.
பிள்ளைகளை பொருத்தவரையில் நண்பர் தூங்கி கொண்டிருக்கிறார்.

பிள்ளைகளின் தாய் சவப்பெட்டியோரம் உடைந்து தேம்பினார்.

வாழத்தெரியாத கோழை மனிதனின் மரணம் தான் தற்கொலை என்று கருத்து சொன்னார்கள்.

இந்த பூமியில் அவரது வேலை முடிந்துவிட்டது உடம்பைவிட இது ஒரு வழி என்ற தத்துவம் சொல்லப்பட்டது.

எதிர்பார்ப்பில் விழுந்த அடி மனைவியை பதறவைத்தது.

எதிர்பார்ப்பு இல்லா குழந்தைகள் விளையாடியது.

அம்மா இருக்கிறார் அப்பா தூங்குகிறார்.

அறவாழி என்ற நணபர் தூங்குகிறார்.



Monday, December 29, 2014

பி.எல்.ஏ. ரெசின்டசியும் மதியசாப்படும்

27.12.14 அன்று இல்லாள் பிறந்தகம் சென்றாள். நண்பர் ஒருவர் அழைக்க மதிய சாப்பாட்டிற்காக தஞ்சை பி.எல். ஏ. ரெசின்டசி சென்றோம்.

நான் இதுவரை சென்றதில்லை  அவர்களுடைய மற்ற தொழில்களில் எனக்கு தெரிந்த வரையில் குறிப்பிட்ட தரம் கடைபிடிக்கப்படுவதால்  சாப்பிடும் செல்லும் முன் சாப்பாட்டை பற்றிய தரத்திலும் ருசியிலும்  எதிர்பார்ப்புடன் சென்றேன்.

இருவரும் சென்றோம் ரூ 135 மதிப்புள்ள சாப்பாட்டை ஆர்டர் செய்தோம்.
சாப்பாடும் வந்தது சாப்பிட்டோம். சாப்பிடும் பொழுதே இதே மாதிரியான சாப்பாட்டை ரூ 50 க்கு நம்மூரில் சாப்பிட்டிருக்கலாம் என்ற கருத்தை நண்பரிடம் சொன்னேன்.

அவரும் ஆமோதித்தார்.

பழங்கால  கலைப்பொருட்கள்  வைத்து அவர்கள் இடத்தை அழகு சேர்த்தார்கள். பராமரிப்பு சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

சாப்பாடு முடிந்தது.

பிராண்ட் நேம் வைத்து பொருட்களின் தகுதியை அல்லது தொழில்களின் தரத்தை முடிவு செய்யகூடாது என்ற எண்ணத்துடன் வெளிவந்தோம்.





நண்பர் சூரியகுமார்

Saturday, December 13, 2014

அப்பா கேட்ட கணக்கு

புள்ள 65000 சம்பளம் வாங்குறான் பெருமையாத்தான் இருக்கு ஆனா நமக்கு ஒன்னும்  ஆவலயே  என்று பையனின் அப்பா புலம்பல்.

என்னப்பா பணம் ஒன்னுமே அனுப்பல....

இருப்பா ஊருக்கு வர்றப்ப பேசிக்கலாம் மகனின் பதில்...

பையன் நல்ல வேலையில் சேர்ந்த பிறகு  உழைக்கும் உடம்பு இருந்தும்  கொஞ்சம் சோம்பல் அடித்தார் . சரியாக கடை திறப்பதில்லை. காலை திறந்து மதியம் மூடி கிடக்கும்.

அவர் கடை நாடி நம்பிசெல்வோர்கள் ஏமாந்து திரும்புவார்கள்.

மகன் தன் கடமை உணர்ந்து கல்யாண வயது தங்கையை நல்ல செலவு செய்து கரை சேர்த்தான்.

வீட்டுக்கும் பணம் அனுப்பி கொண்டிருந்தான்.

அவனுக்கு கல்யாணம் நடந்து குடும்பத்துடன்  வேலை பார்க்கும் இடத்துக்கு தன் மனைவியுடன் குடியிருப்பை மாற்றி கொள்ள மாதம் அவன் அப்பாவுக்கு ஒதுக்கும் பட்ஜெட்டில் துண்டு விழுந்து.

வேட்டி விழுந்த இடத்தில் துண்டு விழுந்து துண்டும் கோவணமாகி போனது.

அப்பாவுக்கு ஆயிரதெட்டு சிந்தனைகள்  என்னடா  பணம் அனுப்பிய பையன் அனுப்பவில்லையே என்று.

அவருக்கு தெரிந்தவர்களிடம் அவர் பேசாமல் இல்லை.

மகன் வந்தான் ...

அப்பா வீட்டு தவணை  .....கார் தவணை....கரண்ட் பில்....என்று குறிப்பு எழுதி செலவு கணக்குகளை ஒப்படைக்க...

பார்த்தார்..படித்தார்...

அவர் கடை திறக்க எழுந்தார்.

Tuesday, November 11, 2014

சாதிவாரி கணக்கெடுப்பு

சட்டர்  கதவு மூடியும் மூடாமலும்  திறந்த கிடந்த கடையில் கணக்காளர் வைத்து எழுதும் ஓர்  சிறிய மேசை ஒன்று. கடையின் முன்புறம் மூன்று பிளாஸ்டிக் சேர் தரையில் கால் பொதித்து வைக்கப்பெற்ற ஓர் சிறிய மரப்பெஞ்சு. பெயிண்ட் மரபெஞ்சின் வழுவழுப்பான தன்மையே எத்தனைபேர் உட்கார்ந்து இருப்பார்கள் என்று கணக்கு சொன்னது.

கடையின் உள்ளே நடுத்தர பெண்மணி..

எதிரே பெரியவர் ஒருவர் அமர்ந்திருக்க....

உள்ளே ராக்கைகளில் பிரித்து வைக்கபட்ட பல்வேறு வண்ண காகிதங்கள்
கள்ளர் ஆண்
கள்ளர் பெண்
அகமுடையர் ஆண்
அகமுடையர் பெண்

இன்னும் பல உட்பிரிவுகளில்  ஜாதகங்கள் பிரித்து வைக்கப்பட்டிருந்தது.

பெண் பார்க்க...மாப்பிள்ளை பார்க்க அணுகவும்.

பெண் கிடைக்காதவர்கள்

மாப்பிள்ளை கிடைக்காதவர்கள்  குறிப்பிட்ட சாதியினருக்கு காசு வாங்கி கொண்டு வரன்கள் அமைத்து கொடுக்கும் இடம் அது.

பொண் பக்கதிலிருக்கு மொகந்தனூர் தான் .

பெரியவர்  ஆங்..விழித்து காது மடலை கைவிரலால் வளைத்துபிடித்து கூர்மையாக்கினார்.

பெண்மணி புரிந்தவராய் அவர் காதருகே சென்று இங்கிருக்கில்ல மோத்தனூா் அதான்.. என்று சொல்ல

ஆங் ...அப்படியா என்று விளித்தார்.

பல்வேறு சாதியினர்  அங்கிருக்க...

சாதிவாரி கணக்கெடுப்புக்கு  சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது ஞாபகத்து வந்தது.
பாரதியாரின் ஓடிவிளையாடு பாப்பாவும் ஞாபகத்துக்கு வர மறுக்கவிலவ்லை.

எங்கள் ஊரில்   மூவேந்தர் முன்னேற்றகழகம்  அம்பேத்கர் மக்கள் இயக்கம் இயங்கி கொண்டிருக்கிறது.


LinkWithin

Related Posts with Thumbnails