Showing posts with label தமிழன். Show all posts
Showing posts with label தமிழன். Show all posts

Wednesday, February 20, 2013

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியானது


காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, கர்நாடகாவின் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி இன்று அரசிதழில் வெளியானது.
காவிரி நடுவர் மன்றம் விசாரணை செய்து இரு மாநிலங்களும் தண்ணீர் பகிர்ந்து கொள்வது குறித்து இறுதித் தீர்ப்பளித்து 6 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு இன்று அரசிதழில் வெளியானது. இதையடுத்து அரசாணையின் நகல் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரள மாநில அரசுகளுக்கு இன்று அரசாணையின் நகல் வழங்கப்படும்.
காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில், தமிழகத்துக்கு 419 டிஎம்சி தண்ணீர் காவிரியில் வழங்கப்பட வேண்டும். கர்நாடகாவுக்கு 270 டிஎம்சி தண்ணீரும், கேரளாவுக்கு 30 டிஎம்சியும், புதுச்சேரிக்கு 7 டிஎம்சி தண்ணீரும் அளிக்கப்பட வேண்டும் என்றும் இறுதித் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டதால், நதிநீர் பங்கீடுகள் தானாகவே சட்ட நடைமுறைக்கு வந்து விடும். நடுவர் மன்றத் தீர்ப்பை மாற்ற யாருக்கும் உரிமையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : தினமணி

Friday, February 08, 2013

காவிரி டெல்டா விவசாயிகளுக்கு இழப்பீடு


பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், விவசாயிகள் செலுத்த வேண்டிய கட்டணத்தை அரசே ஏற்கும் என்று நான் ஏற்கெனவே தெரிவித்ததற்கு இணங்க, டெல்டா பகுதிகளில் உள்ள 5 லட்சத்து 45 ஆயிரம் விவசாயிகளுக்கான 27 கோடியே 67 லட்சம் ரூபாய் பயிர்க் காப்பீட்டுத் தொகையை அரசே செலுத்தியுள்ளது.  பயிரிழப்பை அளவிட்டு, விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய நிவாரணம் மற்றும் செயல்படுத்தப்பட வேண்டிய நிவாரணப் பணிகள் குறித்து நிதி அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட உயர் மட்டக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் நான் பின் வருவனவற்றை இந்த மாமன்றத்திற்கு அறிவிக்கின்றேன்.
மத்திய அரசின் பேரிடர் நிவாரண வரையறைபடி, நெற்பயிரை இழந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு, 2,429 ரூபாய் மட்டுமே நிவாரணமாக வழங்க இயலும்.  மாநில பேரிடர் நிவாரண  வரையறைபடி, ஏக்கர் ஒன்றுக்கு, 4,000 ரூபாய் மட்டுமே நிவாரணமாக வழங்க இயலும்.  இருப்பினும், இந்த 4,000 ரூபாய் நிவாரணத் தொகை, 5,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று நான் ஏற்கெனவே அறிவித்திருந்தேன்.  இதுவன்றி, பயிர் இழப்புக்காக காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து ஏக்கர் ஒன்றுக்கு, 8,692 ரூபாய் வரை பெற இயலும் என்றும் தெரிவித்து இருந்தேன். இங்கே பல உறுப்பினர்கள் சுட்டிக் காட்டியுள்ளபடி, காப்பீட்டு நிறுவனம், குசைமய அடிப்படையில், 5 கிராமங்களைத் தெரிந்தெடுத்து, ஒவ்வொரு கிராமத்திலும் இரண்டு அறுவடை சோதனைகளை மேற்கொண்டு, அந்த சோதனை முடிவுகளின் அடிப்படையிலும்; கடந்த மூன்று ஆண்டுகளில் கிடைக்கப் பெற்ற சராசரி விளைச்சலின் அடிப்படையிலும்; காப்பீட்டு நிவாரணத் தொகையை நிர்ணயிக்கும். இவ்வாறு, காப்பீட்டு நிவாரணத் தொகையை நிர்ணயம் செய்யும் போது 100 விழுக்காடு மகசூல் இழப்பு ஏற்பட்டால் தான், ஒரு ஏக்கருக்கு முழுக் காப்பீட்டுத் தொகையான 8,692 ரூபாய் கிடைக்கும்.  50 விழுக்காடு மகசூல் இழப்பு ஏற்பட்டால், ஒரு ஏக்கருக்கு சுமார் 4,350 ரூபாய் தான் காப்பீட்டு நிவாரணத் தொகையாக கிடைக்கும். மேலும், சோதனை அறுவடை செய்து முடிக்கப்பட்டு, காப்பீட்டு நிவாரணத் தொகை பெறுவதற்கு தாமதம் ஏற்படும்.  இதனைத் தவிர்க்கும் வகையில், 50 விழுக்காட்டிற்கும் மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு முழு காப்பீட்டு நிவாரணத் தொகையை முன் கூட்டியே தமிழக அரசு வழங்கும். இதன்படி, 50 விழுக்காட்டிற்கு மேல்  மகசூல் பாதித்துள்ள 1 லட்சத்து 75 ஆயிரம் விவசாயிகளின் 3.61 லட்சம் ஏக்கர் பயிர்களுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு, 15,000 ரூபாய் என்ற வீதத்தில் நிவாரணத் தொகை வழங்கப்படும். அதாவது, பேரிடர் நிவாரணம், வேளாண் பயிர்க் காப்பீடு, மற்றும் சிறப்பு கூடுதல் நிவாரணம் என மொத்தமாக, ஏக்கர் ஒன்றுக்கு 15,000 ரூபாய் உடனடியாக விவசாயிகளுக்கு எனது தலைமையிலான அரசால் வழங்கப்படும். இதனால், அரசுக்கு 541 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.
காவேரி டெல்டா விவசாயிகள் அனைவருக்கும் தமிழக அரசே பயிர்க் காப்பீட்டுத் தொகையை செலுத்தியுள்ளதால், 50 விழுக்காட்டிற்கும் குறைவாக பயிரிழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கும், அந்தந்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள சராசரி பயிரிழப்புக்கு ஏற்ப, காப்பீட்டு நிவாரணம் வழங்கப்படும். காப்பீட்டு நிறுவனத்தின் அனுமதி கிடைக்கப் பெற்றவுடன், இந்த நிவாரணம் வழங்கப்படும்.

Sunday, February 03, 2013

அழிந்துவரும் தமிழர் பண்பாட்டுப் பொருள்கள்




அரிக்கன் விளக்கு
காற்றால் சுடர் அணைந்துவிடாதபடி கண்ணாடிக் கூண்டு பொருத்தப்பட்ட கைப்பிடியுடன் கூடிய மண்ணெண்ணெய் விளக்கு.
அம்மி
குழவி கொண்டு மிளகாய், தேங்காய் முதலியவற்றைச் சமையலுக்கு ஏற்றவாறு அரைக்கப் பயன்படுத்தும் நீள்சதுரக் கல்.
அண்டா
அகன்ற வாயும் அதே அளவிலான அடிப்பாகமும் உடைய பெரிய பாத்திரம்.
அடுக்குப்பானை
ஒன்றின் மேல் ஒன்றாக (கீழே பெரியதிலிருந்து மேலே சிறியது வரை) வைக்கப்பட்ட பானைகளின் தொகுப்பு. இதில் உப்பு, புளி, தானியங்கள் போன்றவற்றை சேமித்து வைத்திருப்பர்.
அடிகுழாய்
கைப்பிடியைப் பிடித்து அடிப்பதன் மூலம் நிலத்தின் அடியிலிருந்து நீரை வெளியே கொண்டுவரப் பயன்படும் குழாய்.
ஆட்டுக்கல்
வட்ட அல்லது சதுர வடிவக் கல்லின் நடுவே குழியும், குழியில் பொருந்தி நின்று சுழலக்கூடிய குழவியும் உடைய மாவு அரைக்கும் சாதனம்.
அங்குஸ்தான்
தைக்கும்போது கையில் ஊசி குத்தாமல் இருக்க நடுவிரல் நுனியில் அணியும் உலோக உறை.
ஓட்டியாணம்
பெண்கள் இடுப்பைச் சுற்றி ஆடையின் மேல் அணிந்து கொள்ளும் பொன்னால் அல்லது வெள்ளிப் பட்டையால் செய்யப்பட்ட ஒருவகை ஆபரணம்.
எந்திரம்
(அரிசி, உளுந்து முதலிய தானியங்களை அரைக்கவோ உடைக்கவோ பயன்படுத்தப்படும்) கீழ்க்கல்லில் நடுவில் உள்ள முளையில் சுற்றும்படியாக மேல்கல் பொருத்தப்பட்ட வட்டவடிவச் சாதனம். இதைத் திரிகல், திரிகை, இயந்திரம் என்றும் கூறுவர்.
உரல்
வட்ட வடிவ மேற்பரப்பின் நடுவில் கிண்ணம் போன்று குழியுடையதும் குறுகிய இடைப் பகுதியை உடையதும் தானியங்களைக் குத்த அல்லது இடிக்கப் பயன்படுத்துவதுமான கல்லால் அல்லது மரத்தால் செய்யப்பட்ட சாதனம்.
உரி
(வீடுகளில் பால், தயிர், வெண்ணெய் முதலிய பொருள்களை வைத்திருக்கும் பானைகளைத் தாங்கி இருக்கும்) உத்தரத்திலிருந்து தொங்கவிடப்பட்டிருக்கும் கயிறு அல்லது சங்கிலியால் ஆன கூம்புவடிவ அமைப்பு.
குஞ்சம் - குஞ்சலம்
(பெரும்பாலும் பெண்களின் சடையில் இணைத்துத் தொங்கவிடப்படும்) கயிற்றில் இணைக்கப்பட்ட நூல் கொத்து அல்லது துணிப்பந்து போன்ற அலங்காரப் பொருள்.
கூஜா
(குடிப்பதற்கான நீர், பால் முதலியவற்றை வைத்துக் கொள்ளப் பயன்படுத்தும்) புடைத்த நடுப்பகுதியும் சிறிய வாய்ப் பகுதியும் அதற்கேற்ற மூடியும் கொண்ட கலன்.
கோகர்ணம்
(ரசம், மோர் முதலியவற்றை ஊற்றப் பயன்படும் விதத்தில்) ஒரு பக்கத்தில் மூக்கு போன்ற திறப்பை உடைய ஒருவகைப் பாத்திரம்.
கொடியடுப்பு
ஒரு பெரிய அடுப்பும் அதிலிருந்து கிடைக்கும் வெப்பத்தைப் பயன்படுத்தும் வகையில் இணைக்கப்பட்ட சிறிய அடுப்பும் கொண்ட அமைப்பு.
சுளகு
வாய்ப்பகுதி குறுகளாகவும் கீழ்ப்பகுதி அகலமாகவும் இருக்கும்படி ஓலை முதலியவற்றால் பின்னப்பட்ட (தானியங்களைப் புடைப்பதற்குப் பயன்படும், முறத்தைவிடச் சற்று நீளமான) ஒரு சாதனம்.
தாவணி
(இளம் பெண்கள் அணியும்) ஒரு சுற்றே வரக்கூடிய அளவுக்கு இருக்கும் சேலையின் பாதி நீளத்திற்கும் குறைவான ஆடை.
தொடி
பெண்கள் தோளை அடுத்த கைப் பகுதியில் அணிந்து கொள்ளும் பிடித்தாற்போல் (அழுத்தம்) இருக்கும் அணி வகை.
நடைவண்டி
(குழந்தை நடைபழகுவதற்காக) நின்று நடப்பதற்கு ஏற்றவகையில் மரச் சட்டத்தை உடைய மூன்று சிறிய சக்கரங்களைக் கொண்ட விளையாட்டுச் சாதனம்.
பஞ்சமுக வாத்தியம்
கோயில்களில் பூஜையின் போது வாசிக்கப்படுவதும் ஐந்து தட்டும் பரப்புகளைத் தனித்தனியாகக் கொண்டிருப்பதுமான, பெரிய குடம் போன்ற ஒரு தாள வாத்தியக் கருவி.
பாக்குவெட்டி
(பாக்கு வெட்டுவதற்குப் பயன்படும்) சற்றுத் தட்டையான அடிப்பகுதியையும் வெட்டுவதற்கு ஏற்ற கூர்மை உடைய மேற்பகுதியையும் கொண்ட சாதனம்.
பிரிமணை
(பானை போன்றவை உருண்டுவிடாமல் இருப்பதற்கு ஏற்ற வகையில் அவற்றின் அடியில் வைக்கும்) பிரிகளைக் (வைக்கோல்) கொண்டு வளையம் போல பின்னப்பட்ட சாதனம்.
புல்லாக்கு
மூக்கு நுனியில் துவாரங்களுக்கு இடையில் தொங்கவிடப்படும் பெண்களின் அணி வகைகளுள் ஒன்று.
முறம்
(தானியங்களைப் புடைப்பதற்குப் பயன்படும்) நுனிப்பகுதி சற்று அகலமாக இருக்கும்படி மெல்லிய மூங்கில் பிளாச்சு முதலியவற்றால் பின்னப்பட்ட தடித்த விளிம்புடைய சாதனம்.
லோட்டா
நீர் குடிப்பதற்கான நீள் உருண்டை வடிவக் குவளை.
மரப்பாச்சி
பெண் குழந்தைகளுக்கான, மனித உருவம் செதுக்கப்பட்ட மரப் பொம்மை.
மின் சாதனங்கள் வந்துவிட்ட பிறகு இத்தகைய நம் தமிழர் பண்பாட்டுப் பொருள்கள் எல்லாம் இப்பொழுது அழிந்துகொண்டே வருகின்றன. முக்கால்வாசி புழக்கத்தில் இல்லை என்றே கூறலாம். அவற்றையெல்லாம் சேமித்து, பாதுகாத்து, அடுத்தடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு என்பதை நினைவில் நிறுத்துவோம்.
தொகுப்பு: சிவமானசா

நன்றி : தினமணி

Thursday, January 24, 2013

தஞ்சாவூரும் தண்ணீர்பஞ்சமும்


இயற்கை பொய்த்துவிட்டது. காவிரியும் வற்றிவிட்டது. கதிர்கள் பால் பிடிக்காமல்  காய தொடங்கிவிட்டது.
காய்ந்த வயல்களை பார்க்கவே சிரமம்.



போர்செட்காரர்களை அணுகி தண்ணீர் இறைப்பவர்கள் இறைத்து கொண்டிருக்க வாய்க்கால் பாசனத்தை நம்பி மட்டுமே விவசாயம் செய்தவர்களின் நிலைமை மோசம்

ஒரு பக்கம் அறுவடை ஆரம்பித்துவிட்டது.  சன்ன நெல்ரகங்கள் தனியார் வியாபாரிகளிடம் போட்டியில் நிற்க மோட்ட நெல்ரகங்கள் கேள்வியில்லாமல் இருக்கிறது.

விவசாயிகளின் மனதில் தமிழகஅரசு இழப்பீடு எப்பொழுது அறிவிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பில் சாதாரண விவசாயிகளுடன் சேர்ந்து அறுவடை செய்து நன்றாக லாபம் சம்பாதித்த விவசாயிகளும் அடக்கம்.

அரசு மௌனம் காக்க மக்களின் மனதில் எதிர்பார்ப்பும் கூடிகொண்டேயிருக்கிறது.

தமிழக அரசு காவிரியில் நீர் தர மறுத்த கர்நாடக அரசிடம் இழப்பீடு கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக செய்தி.

இன்னும் சிலமாதங்கள் பொறுத்திருப்போம்.

முன்பதிவு

Sunday, October 24, 2010

தமிழன்

தமிழன்
புரியாத மொழி பேசுபவனைக்
குருவாக பார்க்கிறான்
சரியாகத் தமிழ்ப்பேசுபவனைக்
குறுகுறுவெனப்  பார்க்கிறான்

காற்றாடி,கட்டில்,சோறு என்றால்
நகைக்கிறான்
திக்கு,திங்கள்,ஆழி என்றால்
புரியாமல்
திகைக்கிறான்

உண்மைதானே!
அவனைப்பொறுத்தவரை
மம்மி டாடி
அங்கிள் ஆண்ட்டி என்று
பேசுவது கண்ணியம்
அப்பா அம்மா
அத்தை மாமா
சொற்கள் அன்னியம்!

-புதுவை ப் பிரபா-

LinkWithin

Related Posts with Thumbnails